இயேசு தன்னுடைய மலை பரப்புரையில் கூறுகிறார்
மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத் 5:14)
இன்னொரு இடத்தில் இயேசு கூறுவதைக் காணுங்கள்.
லூக்கா 8:17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
ஆனால் பல தேவ இரகசியங்கள் இன்னும் மறைபொருளாகவே பலருக்கு உள்ளது. தேவ ஜனம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மக்கள் பல தேவ இரகசியங்களை அறியாது தங்கள் வாழ்க்கைகளில் அல்லல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏன் இந்த இரகசியங்கள் வெளியாக்காப் படாது மக்கள் இப்படி அல்லல் அடைகின்றார்கள்?
தேவனை, தேவனின் அரசை, தேவனின் நீதியை தேடாததே.
மத் 6:33 ல் இயேசு வெகு தெளிவாக
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." என்று கூறியிருக்கின்றார்
தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன, அவருடைய நீதி என்றால் என்ன என்று தேவ ஆவியானவர் உங்களுக்கு போதிக்கக் கேளுங்கள். அதின் மறைபொருளை நீங்கள் அறியும் போது, உங்களின் வாழ்வு நிலைப்பெறும்.
மறைப்பொருள் வைக்கப் படுவதற்கு பல காரணிகள் உண்டு. அவற்றில் இரண்டு முக்கியமான காரணங்களை இப்பொது காண்போம்.
1. இயேசுவின் ஊழியத்தில் அவர் பல உவமைகளை சொல்கிறார்
இயேசு தன்னுடைய ஊழியக் காலத்தில் பல உவமைகளை கூறி போதிக்கின்றார். ஏன் உவமைகளால் பேசுகின்றீர் என்று அவர் சீடர்கள் கேட்க, அவர் என்ன விடையளித்தார் என்று பாருங்கள்.
மாற்கு 4:10-13. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
ஆகவே எல்லாருக்கும் இரகசியங்கள் வெளியாக்கப்படுவதில்லை. அதன் காரணமே இயேசு மத் 7: 8 ல் தேடுகிறவன் கண்டடைகிறான், என்கிறார்.
2. நம்மால் உள்வாங்கி மறைபொருளின் விளக்கம் அறிய முடியுமா?
இயேசு தனது ஊழியத்தின் கடைக் கட்டத்தில் கூறுகிறார்
யோவான் 16:12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
ஆக, முக்கியமான காரணி, நாம் அந்த மறைபொருளை உள்வாங்கி, அந்த மறைப்பொருளின் தன்மையை அறிந்து கொள்ள நம்மால் இயலுமா?
மறைபொருளை அறிந்து கொள்கிற வளர்ச்சி நம்மில் உள்ளதா?
மூன்றரை வருடம் இயேசுவோடே ஊழியம் செய்த அப்போசுதலர்கள், இயேசுவின் கடைசி ஊழியக் கட்டத்தில் மறைபொருள்களை அறிந்து கொள்ளும் வளர்ச்சி இல்லை.
இந்த வளர்ச்சியையே பேதுரு தன்னுடைய நிரூபத்தில். நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். (1 பேதுரு 2:3) என்று கூறுகிறார்
முதலில் தேவனுடைய பிள்ளையாக ஆன்மீக வளர்ச்சி வேண்டும். அந்த வளர்ச்சி இல்லாது, பிறந்த குழந்தையாக தேவனே எனக்கு மறைபொருள்களை வெளிப்படுத்தும் என்றால், முடியாத காரியம். வெளிப்படுத்தினால் தாங்குவீர்களா? முதலில் உங்களை ஆராய்ந்து பாருங்கள்.
சில மறைபொருள்களை ஆவியானவர் உங்களுக்கு இந்த நூலின் வாயிலாக விளக்குவார். ஆனால், மறைபொருள்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் உஙகளுக்கு உள்ளதா என்பதை ஆராய்ந்து, பக்குவம் இருக்கிறது என்று உணர்ந்தப்பின் படிக்கவும்.
அடுத்த பகுதி: ஐசுவரியம் ஆசீர்வாதமா?
No comments:
Post a Comment