நீங்கள் கொண்டிருப்பது யாருடைய ஆவி?


ஒரு ஆங்கில திருச்சபைக்கு ஞாயிறு காலை ஆராதனைக்காக ஆவியானவர் என்னை வழிநடத்த சென்றேன். காலை 8:35 சென்று கண்டால் திருச்சபையில் உட்கார கூட இடம் இல்லை. பின்னர் ஒரு சிறுவனை எழுப்பி அவர் தாயருகில் அமரவைத்து எனக்கு இடமளித்தார் ஒரு சபை உறுப்பினர். அங்கு சென்று அமர்ந்தேன். 

அங்கு அந்த திருச்சபைக்கு அன்றுதான் முதன்முதலாக சென்றிருந்தேன், அங்கு ஆராதனை முடிந்து பிரசங்கம் ஆரம்பிக்கும் முன்னர் Visitors எழும்புங்கள் என்றனர். ஓ! முதன்முறை வருபவர்களை  இந்த சபையினர்  Visitors என்று அழைக்கின்றார் போலும் என்று எழுந்து நின்றேன். வந்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டு ஒழுங்கிணைப்பாளர் தான் வைத்திருந்த  அறிவிப்புகளை படிக்க ஆரம்பித்து விட்டார். அறிவிப்பில் ஒரு புதிய சபை உறுப்பினரை சேர்த்துக் கொள்ளுவதாகவும், அவர் முன்பு இருந்த சப்யைன் மூப்பர்கள் ஒப்பமிட்ட ஒரு கடிதத்தையும் படித்தார். 

ஆராதனை முடிந்ததும் ஆவியானவர் சொன்ன படியே வெளியே விருவிருவென நடந்து சென்று வெளியேறிவிட்டேன். வெளியே ஆராதனை வேளை காலை 8:45 என்று எழுதியிருந்தது. எனக்கு புரியவில்லை. 8:35க்கு போனால் ஆராதனை ஆரம்பமாகிவிட்டது.

அடுத்த ஞாயிறும் அதே சபைக்கு ஆராதனைக்கு ஆவியானவர் வழிநடத்த, சென்றேன், இம்முறை சற்று முன்னரே 8:20க்கு சென்றேன். நான் ஆராதனைக்காக ஆவியில் ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திற்கு சபை மூப்பர் ஒருவர் வந்தார். 

என் பெயர் மற்றும் என் விவரங்களை தெரிந்து கொண்டு, நான் முன்பிருந்த சபை விவரம் கேட்டார். நான் உள்ளதை உள்ளபடியே சொல்லி, எலியாவைப் போல, ஆபிரகாமைப் போல நான் திரிகிறவன். ஆவியானவர் எங்கு கூட்டிச் சென்றாலும் அங்கே செல்பவன் என்றேன். அவர் அதற்கு, அதே ஆவியானவர் தான் எங்களுக்குள்ளும் இருக்கிறார், எங்கள் சபையில் சேர இதற்கு முன்பு நீங்கள் சென்ற சபையில் இருந்து ஒரு கடிதம் எடுத்து வந்தால் நல்லது, அல்லது  நாங்கள் ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கிறோம் அந்த படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பவும் என்றார்.

சபையின் ஆராதனை நேரம் 8:30க்கு ஆரம்பிக்கும் வேளை ஆதலால், அவர் இது குறித்து பின்னர் பேசலாம் என்று சென்றுவிட்டார். ஆராதனை முடிந்து காத்திருந்தேன். என் சாட்சியை சபையோருடன் பகிரலாமே என்று. ஆனால் அந்த மூப்பர் வரவில்லை.

இன்னொருவர் வந்தார், என்னை பற்றி விசாரித்தார். நான் என்னைக் குறித்து மிகச் சுருக்கமாக சொன்னேன். சிறிது நேரம் பேசிவிட்டு அவர் என்னுடைய கைப்பேசி எண்ணை வாங்கிவிட்டு பின்னர் பேசலாம் என்று சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வை பகிர காரணம் உள்ளது. அந்த மூப்பர் என்னை கேட்கும் வரையில் எலியாவின் ஆவி, ஆபிரகாமின் ஆவி என்றெல்லாம் நான் யாரிடமும் சொன்னதாக ஞாபகம் இல்லை. என் பெயர் ஆபிரகாம் என்று தேவன் முன்னேயே சொல்லியிருந்தாலும், இப்படி எலியாவின் ஆவி, ஆபிரகாமின் ஆவி என்று நான் சொன்னதில்லை.

இதைக் குறித்து நான் தியானிக்கும் போது, இந்த வார்த்தைகள் நானாக பேசவில்லை, ஆவியானவர் தான் என்னை பேச வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். இந்த காரியத்தை மனதில் வைத்துக் கொண்டேன்.

ஆவியானவர் இந்த நூலை எழுதச் சொன்ன போது இந்த தலைப்பை கொடுத்ததும் எனக்கு ஒரே வியப்பு. இந்த வகை தலைப்புகள் எப்போதும் சர்ச்சையை கிளப்பும். ஆதலால் இது தேவைதானா என்று யோசித்தாலும், ஆவியானவரின் சொல்லிற்கு கீழ்படிந்தேன். இதோ எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

எலியாவின் ஆவி

யோவான் ஸ்நானகன் எலியாவின் ஆவியைக் கொண்டிருந்தான் என்று வேதம் சொல்கிறது.

லூக்கா 1:17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

ஆபிரகாமின் ஆவியைக் கொண்டிருப்பதாக எனக்குத்தெரிந்து யாரையும் வேதம் குறிப்பிடவில்லை.

ஆனால் ஆபிரகாமின் வாழ்க்கை குறித்து ஆதியாகமத்தில் எழுதியிருக்கிறது.

மிக முக்கியமாக, ஆபிரகாமை கர்த்தர் தன் நண்பன் என்று அழைக்கிறார்.

    ஏசாயா 41:8. என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே,

சரி, இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.

யோவான் ஸ்நானகன் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் இருந்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். 

எலியாவின் ஆவியைக் கொண்டிருப்பான் என்றும் வாசிக்கிறோம்.

அப்போ, அவனுக்குள் இருந்தது இரண்டு ஆவியா?

எலியாவை நடத்தியது பரிசுத்த ஆவியே. 

ஓபதியா என்ன சொல்கிறான் பாருங்கள்...

1 இராஜாக்கள் 18: 7-12

ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு; அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன். உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான். இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே. நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.

பரிசுத்த ஆவியின் வல்லமையே எலியாவை பெரிய காரியங்களை செய்ய வைத்தது.

ஆக பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தினால் முன்னிருந்த தீர்க்கதரிசி மற்றும் தூயரை வழி நடத்தியது போலே வழி நடத்தி, பெரிய காரியங்களை செய்கிறார்.

இதில் அந்த தீர்க்கதரிசிக்கோ தூயருக்கோ எந்த மகிமையும் இல்லை. தேவனுக்கே மகிமை. இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளவே இந்த மறைபொருளை இதை எழுதப் பணித்தார்.

No comments:

Post a Comment