பாடு, பாரம் என்ன வேற்றுமை
பாடுகள் என்றால் என்ன?
கிறித்துவிற்காக பாடு அனுபவிப்பது என்றால் என்ன?
கர்த்தர் பாடுகளை அனுமதிப்பாரா?
காணலாம் இப்பகுதியில்.
பாடு, பாரம் என்ன வேற்றுமை
பாடு (suffering)
பாரம் (Burden, Oracle)
யோபு பாடுபட்டான். கர்த்தர் அவனை சாத்தானிடத்தில் பாடுபட ஒப்புக்கொடுத்தார்.
பழைய ஏற்பாட்டில் பாரம் என்று பலஇடங்களில் வரும். ஆனால் புதிய ஏற்பாட்டில் பாரம் எனும் சொல் வருவது அரிது. அதற்கு காரணம் எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில்
எரேமியா 23:33 -36 கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும். கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக. ஆனால் கர்த்தரால் வரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.
ஆனால் இன்றைய கிறித்தவர்களுக்கு இந்த இரகசியம் தெரிவதில்லை. கர்த்தர் ஜெப பாரத்தை என்மேல் வைக்கிறார், கர்த்தர் எனக்கு கொடுத்த பாரம் இது என்று கூறுவோர் பலருண்டு.
கர்த்தர் உங்களுக்கு ஒரு காரியம் கொடுக்கும் முன்னே உங்களால் அக்காரியம் செய்ய இயலும் என்பதைத் தெரிந்தே கொடுக்கிறார். இயேசு கூறுகிறார்
மத்தேயு 11:28-30 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
இங்கே காணுங்கள், சாந்தம், மனத்தாழ்மை என்ற இரு மிகப்பெரிய அரிதான குணங்களை தான் கொண்டிருப்பதாகவும், அவர் நுகத்தை ஏற்கவும் சொல்கிறார். அவர் நுகம் மெதுவாய் இருக்கிறது என்றும் சொல்கிறார்.
ஆதலால், கர்த்தரால் உண்டான பாரம் என்று எதையும் சொன்னால், நாம் மெதுவான யேசுவின் நுகத்தை ஏற்காது இருக்கிறோம் என்று பொருள் படுகிறதே.
பாடு
பாடுகள் கிறித்தவருக்கு உண்டு என்பதற்கு பல வசனங்கள் வேதத்தில் உண்டு.
இயேசு இறுதிக்காலங்கள் குறித்த முன்னுரையில் என் நிமித்தமாக உங்களை துன்புறுத்துவார்கள் என்று கூறியிருக்கிறார்.
பலர் காட்டும் பவுலடியாரின் நிருபங்களில் பாடுகள் குறித்து வரும் . எடுத்துக்காட்டாக
ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.
பேதுருவும்
1 பேதுரு 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
1 பேதுரு 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
1 பேதுரு 3:14 நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில்
வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
ஆக, கிறித்தவரிகளுக்கு பாடு என்பது, இயேசுவின் சுவிசேஷத்தின் நிமித்தமாக வந்தால், அதை இயேசுவே கூறியிருக்கிறார், அப்படிபட்ட பாடு வரும் போது மகிழ்ந்து களிகூறு.
மத்தேயு 5: 11-12. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
இன்னொரு விதமான பாடு என்று பவுல் கூறுகிறார், மாம்சத்தினால் உண்டாகும் பாடு. பாவம் செய்யத் தூண்டுவது மாம்ச இயல்பு. கர்த்தருக்குள் வளர்ந்த மக்கள், பாவத்திற்காய் மரித்து, இயேசுவோடே உயிர்த்தெழுதவர்களாய் இருக்கும் நாம் பாவத்திற்கு மீண்டும் அடிமையாகாதிருப்பதே ஒரு விதமான பாடு தான்.
ஆனால், இவ்வகைப் பாடுகள் கிறிஸ்து இயேசுவிற்காய் அனுபவிக்கும் பாடுகள் அல்ல. இவை நாம் நமக்காக அனுபவிப்பவை.
இயேசு நம்மில் முழுமையாக ஆட்கொண்டால், எந்த விதமான பாவத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். ஆவியானவரை பெற்றுக் கொண்டவர் பாவம் செய்ய முற்பட்டால், ஆவியானவர் தாமே தடுத்து நிறுத்த வல்லவராயிருக்கிறார். மாம்சத்தை முழுமையாக ஆவியானவரின் ஆளுகைக்கு விட்டால், பாவம் செய்ய ஒரு போதும் ஆவியானவர் அனுமத்திக்க மாட்டார்.
கர்த்தர் தாமே உங்களை வழிநடத்துவாராக. ஆமென்
அடுத்த மறைபொருள்: நியாயத்தீர்ப்பு தேவனுடைய ஆலயத்தில் இருந்து ஆரம்பம் ஏன்?
No comments:
Post a Comment