நியாயத்தீர்ப்பு தேவனுடைய ஆலயத்தில் இருந்து ஆரம்பம் ஏன்?



நியாயத்தீர்ப்பு தேவனுடைய ஆலயத்தில் இருந்து துவங்குகிறது என்று இரு வேறு வசனங்களில் வருகிறது.

1 பேதுரு 4:17. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

மத்தேயு 24:15. மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

தானியேலில் வரும் தரிசனத்தை காணலாம்...

தானியேல் 12: 10-12. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். அன்றாடபலி நீக்கப்பட்டு,

பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும். ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.

இக்காலத்தையே மகா உபத்திரவகாலம் என்றும் கூறுவர்.

இந்த நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குவது ஏன்?

இயேசு தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் மலைப் பரப்புரையில் கூறுகிறார்

மத்தேயு 7:3-5. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும்

என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

இப்படி உபதேசம் செய்தவர், அவருடைய நாமத்தில் என்னென்ன அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன?

இயேசு இன்னொரு இடத்தில் கூறுகிறார் பாருங்கள்

மத்தேயு 23:15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்

இப்போது நாம் காணும் வெளிவேட சபைகள், கூட்டம் கூட்டமாய் மக்களை சேர்த்தால் தசமபாகம் அதிகரிக்கும், காணிக்கை பணம் அதிகரிக்கும், அதில் நல்ல வாழ்க்கை வாழலாம் என்று எவ்வளவு பிரயாசப்ப்டுகின்றார்கள்? இப்படிப் பட்டவர்களுக்கும் இயேசு சொல்லும்

மேற்படி வசனதில் வருபவருக்கும் என்ன வேற்றுமை?

யோவான் 17:12 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை..

சுவிசேஷம் என்னும் பெயரில் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்து மக்களை கூட்டுகிறார்கள்? அது தேவையா என்று பார்த்தால், எல்லா இனத்தவரையும் சீஷராக்குங்கள் என்று இயேசு கொடுத்த கட்டளையை காட்டுகிறார்கள். ஆம், இயேசு சீஷராக்க கட்டளை கொடுத்தார்.

ஆனால் இப்பொது கூட்டம் சேர்ப்பதிலேயே போதகர்கள் குறியாக இருக்கின்றார்கள்.

இன்னும் ஒருபடி மேலே, கிறித்துவம் என்று பெயர் வைத்துக்கொண்டு விக்கிரக ஆராதனை செய்வதும், விக்கிரகங்களாக கர்த்தருக்கும் தங்களுக்கும் இடையே போதகர்களை, மூப்பர்களை வைப்பதும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. இவை இப்போது மட்டுமல்ல,

அப்போசுதலரின் காலத்திலும் நடந்தவை.

பவுல் கூறுகிறார்

1 கொரிந்தியர் 3:4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?

இப்போது உள்ள தேவ ஜனம், மெதொடிஸ்ட், பெந்தகொஸ்தே, என்று கூறுவதும் இதைப் போன்றதே. அறிந்துகொள்வீர் தேவ ஜனமே, நம்மெல்லாருக்காகவும் ஒரே அஸ்திபாரம் இயேசு.

பவுல் சொல்கிறார் மேலே படியுங்கள்

1 கொரிந்தியர் 3:5 -11. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க,

நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். நாங்கள்

தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல்

கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

மாம்சத்தில் வந்த இயேசுவின் சிலுவை மரணத்தை பிரசங்கிக்காது. அவரின் உயிர்த்தெழுதலை பிரசங்காத எந்தவொரு "சபையும்" இயேசுவின் சரீரமாகிய சபை அல்ல.

அப்படியே தங்களை கிறித்துவர் என்று கூறுகிறவர்கள், தங்களை கிறித்துவர்கள் என்று கூறினாலும், அவர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் காத்துக்கொண்டிருக்கிறது.

இயேசு கூறுகிறார் பாருங்கள்

மத்தேயு 7:21-23. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி:

கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும்

உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

அடடா.....பிசாசுகளை துரத்துதல், தீர்க்கதரிசனம் உரைத்தல்... இவைகளை அக்கிரமச் செய்கை என்றல்லவா கூறுகிறார்?

இவர்களை நியாயந்தீர்க்கவே கர்த்தருடைய வீட்டில் இருந்து நியாயத்தீர்ப்பு ஆரம்பிக்கின்றது.

மனுஷகுமாரன் அவரவர் செய்கைக்கு ஏற்றபடி நியாயந்தீர்ப்பார் என்பதின் உட்பொருளும் இதுவே.

பரலோகப் பிதாவின் சித்தத்தை செய்கிறவரே  பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பர். ஆமென்.

அடுத்த மறைபொருள்: செய்யும் வேலையில் உழைப்பது தேவனுடைய ஊழியமா?

No comments:

Post a Comment