இந்நாட்களில் ஊழியக்காரன் என்றால் வேறு எந்த வேலையும் செய்யாது தேவனைப் பற்றியும் அவரின் வார்த்தையையும் பிரசங்கிப்பது தான் முழுநேர வேலை என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. தேவனுடைய ராஜ்யத்திற்கென தன்வாழ்க்கையை அர்ப்பணித்த சில ஊழியக்காரர்கள் இருக்கின்றார்கள். போதகர்கள் பலர் மக்களுக்கு கர்த்தரை பற்றி போதித்து அவர்களை ஆடுகள் மேய்ப்பது போல மேய்ப்பது தான் முழுநேர ஊழியம் என்று கூறுகின்றனர்.
சில நண்பர்கள் கர்த்தருக்கு ஊழியம் என்றால் என்ன என்று கேள்வி கேட்டதுண்டு.
வேதத்தில் முழுநேர ஊழியம் குறித்து நேரடியான தகவல்கள் மிகச்சில. அவைகளில் சிலவற்றை காண்போம்.
1. லேவி கோத்திரம், ஆரோன் புத்திரர்கள்
கர்த்தர் எகிப்திலிருந்து இசுரவேலர்களை அழைத்து வந்தபோது லேவி கோத்திரத்தை தனக்கென பிரித்தெடுத்து, அவர்களுக்கு கர்த்தரே சுதந்திரம் என்று கூறினார். அவர்களில் ஆரோன் புத்திரர்கள் ஆசரிப்புக் கூடாராத்தில் உடன்படிக்கை பெட்டி உள்ள மாபுனித அறைக்குள் வரலாம் என்றும், லேவியர்கள் மாபுனித அறைவெளியே புனித அறையில் கூடாரப் பணிகள், பலிபீடப் பணிகள் செய்ய வேண்டும் என்றும் நியமித்தார்.
அதன்படியே லேவி கோத்திரத்தாருக்கு தனியாக சுதந்திரம் இசுரவேலுக்குள் கொடுக்க வில்லை என்றும்
வாசிக்கிறோம். இந்த வழக்கம் சற்றேறக்குறைய இயேசுவின் நாட்கள் வரையிலும் அதன் பின்பும் இசுரவேலில் பின்பற்றப் பட்டது. யூதர்களுள் இன்றும் ரபீ என்று கூறிக்கொள்ளும் குருமார்கள் உண்டு.
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் காண்போம்
2. இயேசுவின் வாழ்நாள்
வரலாறில் இயேசு தச்சன் மகனாக, யோசேப்பு இறந்ததும் தன் குடும்பத்திற்கென தச்சுத் தொழிலை செய்ததாகக் கூறுகிறது. ஆனால் அவரின் திருமுழுக்கு நடந்த பின்னர், அவர் தேவனுடைய ராஜ்யம் குறித்து பிரசங்கம் செய்ய ஆரம்பித்த பின்னர், தச்சுத் தொழில் செய்ததாக தெரியவில்லை. ஏறத்தாழ மூன்றரை வருடம் அவர் ஊழியம் செய்தார். தேவன் அவர் தேவைகளைச் சந்தித்து வந்திருக்கிறார்
3. பேதுரு, யோவான், யாக்கோபு
பேதுருவை ஊழியத்திற்கு அழைக்கும் போது யேசு சொல்கிறார், உன்னை மனுஷர்களை பிடிக்கிறவனாக்குவேன். அதன் பின்பு பேதுரு மீன் பிடிக்கும் தொழிலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் தன் மீன்பிடி கலையை மறக்கவும் இல்லை (வரி கட்டுவதற்காக தூண்டில் போட்டதும், இயேசு உயிர்த்தபின்னர் 153 மீன்கள் பிடித்ததும் காண்கிறோம்)
4. பவுல்
பவுல் கொரிந்துவில் கூடாரத் தொழிலை செய்தார் என்று வேதம் சொல்கிறது.
அப்போஸ்தலர் 18:1-3 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய
ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே
அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டுவந்தான்.
பவுல் தனக்கு தெரிந்த தொழிலை செய்துக்கொண்டே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் இயேசுவைக் குறித்து பிரசங்கித்தான் என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்ட நிலையில், முழுநேர ஊழியம் அல்லது "கூடாரத் தொழில்" அதாவது மதசார்பற்ற வேலை செய்து உழைப்பது, எது சரியானது என்று பலர் குழம்பும் நிலை உண்டு.
திருமுழுக்கு யோவான் தன் ஊழியத்தில் சொல்கிறான் பாருங்கள்
லூக்கா 3:12-14. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். போர்ச்சேவகரும் அவனை
நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
அவன் கூறுவதில் உள்ள 2 மதசார்பற்ற வேலைகளிலும் அதாவது வரிதண்டுவோர், போர் சேவகர் இருவருக்கும் சொல்வது
1. மக்களை துன்பப்படுத்தாதீர், ஒடுக்காதீர்
2. உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள். அதாவது கையூட்டு (லஞ்சம்) வாங்காதீர்கள்
ஐயா, இப்படி பார்த்தால் முழு நேர ஊழியம் என்பது வெறும் பகட்டா?
இல்லை, இல்லை.... கர்த்தருடைய ஆவியானவர் உங்களை முழுநேர ஊழியத்திற்காக அழைத்தால், கீழ்படிதல் வேண்டும்.
உங்களுக்கான அழைப்பை புரிந்து கொள்ளுங்கள். தேவ மக்கள் அளிக்கும் காணிக்கையில் தன் வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்வது தவறல்ல. ஆனால் கையில் காசில்லை என்பதற்காக "கூடாரத் தொழில்" செய்வது இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாகி விடும்.
கர்த்தர் சொல்கிறார்
கலப்பையின் மேல் கைவைத்துவிட்டு பின்னிட்டுப் பார்ப்பவன் தேவனுடைய ராஜ்யத்திற்கு உகந்தவனல்ல
மதசார்பற்ற வேலையிலும் ஊழியம் செய்யலாம். கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்வோர், எங்கிருந்தாலும் எந்த நிலையிலும் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறார்கள். உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக் கடவது. கர்த்தர் தாமே உங்களை வழிநடத்துவாராக. ஆமென்.
அடுத்த மறைபொருள்: சொல்லும் சொற்களில் கவனம் தேவை. ஏன்?
No comments:
Post a Comment