குடும்ப சாபம் என்றால் என்ன? அதை போக்குவது எப்படி?

அன்பானவர்களே, இந்த பகுதிக்கு வரும் முன்னர் நீங்கள் கிறித்தவர்களுக்கு சாபம் உண்டா என்ற பகுதியை படித்து விட்டு வந்தால் நலம்.

சென்ற பகுதியில் கண்டோம், கிறித்தவர்களும் சபிக்கப்படலாம். இந்த சாபம் நம் அக்கிரமங்களாலும், நம் மூதாதையரின் அக்கிரமங்களாலும் நம் மேலும் நம் தலைமுறைகள் மேலும் சுமருகிறது என்பதையும் கண்டோம். நம் கீழ்படியாமையே நாம் செய்யும் மிகக் கொடிய அக்கிரமம்.

தேவன் மனிதகுலத்தின் நிமித்தம் இப்பூமியை சபித்தார் என்று வேதம் சொல்லுகிறது.

ஆதியாகமம் 3:17 .....அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; ....

தேவனுக்குக் கீழ்படிதலே நன்று. பலிகளைப் பார்க்கிலும், ஜெபங்களைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்படிதலே நன்று.

இசுரவேலின் முதல் அரசனான சவுலின் வாழ்க்கையைக் காணுங்கள். கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்படியாமல் பலிக்காக மிருகங்களை போரிட்ட நாட்டிலிருந்து கொண்டு வந்தான். 


    1 சாமுவேல் 15:15-22 
    அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்;கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டுவந்தார்கள் என்றான். அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
நீங்கள் எத்துனை ஜெபம் செய்தாலும், எத்துனை காணிக்கை கொடுத்தாலும், தசமபாகம் - ஏன் முழு சொத்தையும் விற்றுத் தீர்ந்து ஏழைக்குக் கொடுத்தாலும், கர்த்தருடைய வார்த்தைக்குச் செவி சாய்க்காமல் போனால், கீழ்படியாமையே. 

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அனனியா சப்பீராள் செய்தது என்ன காண்போமா? 

அப்போசுதலர் 5:1-9
    அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.

தன் நிலத்தை விற்று அதில் ஒரு பங்கை எடுத்து கர்த்தருக்கு காணிக்கை செலுத்தினர். அதை விற்கும் முன்னே அந்த நிலமும் அதன் பலனும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தது. விற்ற பின்பும் அந்த பணம் அவர்களுக்கே சொந்தமாய் இருந்தது. காணிக்கை என்று கொடுக்கும் போது அதை வஞ்சித்து வைத்ததால் பரிசுத்த ஆவிக்கு எதிரான பாவமாகவே தேவ மனிதன் பேதுரு கூறுகிறான்.

தேவனிடத்தில் எள்ளளவேனும் பொய் சொல்வது கூடாது. பொய் சொல்லுதல் மிகப் பெரிய பாவம்.

சரி, இப்போது நம் முன்னோர்களின் சாபம் எப்படி நம் மேல் வரும் என்று காணலாம்.

முன்னோர்களின் அக்கிரமத்தால் அவர்கள் அடிக்கப்பட்டிருக்க உடலிலும் மனத்திலும் காயப்பட்டு பின்னர் வரும் தலைமுறைகளுக்கு வழிவழியாய் உடலில் குறைபாடுகள், ஊனம், வியாதி என்று வரவாய்ப்பு அதிகம்.

நான் கண்கூடாகக் கண்ட சில உதாரணங்கள்.

கர்த்தரின் நீதியென்பது யூதர்களுக்கு ஒன்று, புறஜாதியாருக்கு வேறொன்று என்றில்லை. அக்கிரமம் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்பவர் கர்த்தர். நல்ல காரியம் எங்கு நடந்தாலும் அந்த இரக்கத்தை தலைமுறைகளுக்கு காண்பிப்பவர் கர்த்தர்.

அவருடைய நீதியை அறிந்தாலும், அறியாதிருந்தாலும், நீதி பிழறா தேவன்.

என் குடும்பத்தில் பலர் மலடியாக இருப்பதின் காரணம் முன்னோர் செய்த அக்கிரமங்கள் என்பது என் நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர் மலடியாக இருக்கலாம், 

எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறையான என் தாயாரின் தங்கைக்கு பிள்ளைகள் இல்லை, பின்வந்த எங்கள் தலைமுறையில் நான்கு பேருக்கு பிள்ளைகள் கிடையாது. 

இது எதனால்? இப்படிப்பட்ட தொடர் மலட்டுத்தன்மை குடும்ப சாபம் மூலமாகவே வருகிறது. கர்த்தர் அமலேக்கியரின் கர்ப்பத்தை சாராளின் நிமித்தம் அடைத்ததை நாம் காண்கிறோம்.

வேறொரு உதாரணம் காணலாம்.

ஊனமாய் பிறப்புகளும் குடும்ப சாபமாக இருக்கலாம். 

எங்கள் குடும்பத்தில் 3 பேர் ஏதோ ஒரு காரணத்தால் உடலில் ஊனமாய் பிறந்திருக்கக் காரணமும் குடும்ப சாபமே காரணம்.

இப்போது சாபத்தை போக்குவது எப்படி என்று காணலாம்.

ஒரு சாபமும் இராது என்னும் நிலை கடைநிலை. 

வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. 

ஆனால் கிறித்தவர்கள் மனம் திரும்பி, தங்களின் பாவங்களையும், தங்கள் மூதாதையரின் பாவங்களையும் அறிக்கை செய்து இயேசுவின் நாமத்தினால் இப்பாவங்களை விரட்ட முடியும்.

அதற்கான ஆதார வசனம்

    கலாத்தியர் 3:13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கிறிஸ்து நமக்காக சாபமானர் என்று மனப்பூர்வமாக நம்புவது

இந்த வசனத்தை, இந்த வாக்குதத்தத்தை தினமும், சாபம் தீர்ந்தது என்ற மனநம்பிக்கை வரும் வரையிலாவது, தியானித்து, அந்த வசனத்தில் அறிக்கை செய்யப்பட்ட இயேசுவை பற்றுவது, பரிசுத்த ஆவியை கேட்டுப் பெற்றுக்கொண்டு அவருடைய வழிநடத்துதலின் படியே வாழ்க்கை நடத்துவது, இனி நான் அல்ல, என்னில் உள்ள இயேசுவே என்னில் வாழ்கிறார் என்று பரிசுத்த வாழ்க்கை வாழ்வது.

இவைகளை கடைப்பிடித்தால், இயேசு ஒரு குருடனை சுகமாக்கும் போது சொன்ன பிரகாரம், (யோவான் 9:3) தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்பொருட்டு விடுதலை கிடைக்கும்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே" என்ற தாயுமானவர் கூற்றின் படியே, இந்த நூலைப் படிக்கும் எல்லோரும் சாபம் நீங்கி இயேசுவின் மெய்யான இரட்சிப்பை பெற்றுக் கொள்ள தேவனை ப்ரார்திக்கின்றேன். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.


அடுத்த மறைபொருள்: இயேசுவின் ஊழியமா? அப்போசுதல ஊழியமா?

No comments:

Post a Comment